திண்டுக்கல்லில் அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை மர்ம நபர்கள் ஏற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் தமிழக அரசையும், அதிமுக கட்சி விவகாரத்தையும் பாஜக தான் தீர்மானிக்கின்றது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து அரசியல் ஆர்வலர்களாலும், பொதுமக்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது.
அதற்கேற்பவே முதலமைச்சர் பழனிசாமியின் செயல்பாடுகள் இருந்தது வருகிறது. சமீபத்தில் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மோடியின் வற்புறுத்தலின் பேரில் தான் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்ததாக தெரிவித்தது அரசியல் களத்தில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் பேருந்து நிறுத்த அதிமுக கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை இறக்கி விட்டு பாஜக கொடி ஏற்றப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி அதிமுகவினர் உடனடியாக பாஜக கொடியை இறக்கினர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த கீரனூர் காவல் துறையினர், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.